திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை செலவுக்கு ரூ.1 லட்சம்; மந்திரி முருகேஷ் நிரானி அறிவிப்பு
திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை செலவுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று மந்திரி முருகேஷ் நிரானி அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று மந்திரி முருகேஷ் நிரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூருவில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண் மீது திராவகம் வீசப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. இளம்பெண்ணின் நிலைமையை கண்டு மிகுந்த வேதனை அடைந்தேன். திராவகம் வீசுவது போன்ற கீழ்மட்டமான செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற கீழ்த்தரமான செயலால் மனித குலத்திற்கே பெரும் கேடு ஆகும். இளம்பெண் மீது திராவகம் வீசிய வாலிபருக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைத்தே தீர வேண்டும். ஏனெனில் இதுபோன்ற செயல்களை சகித்து கொண்டு சும்மா இருந்து விட முடியாது. அவர் மீது பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும்.
திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் மருத்துவ செலவுக்காக எனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்குவேன். அதன்பிறகு, அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியையும் கண்டிப்பாக வழங்குவேன். இதுபோல், மற்றவர்களும் இளம்பெண்ணுக்கும், அவரது குடும்பத்திற்கும் உதவ முன்வர வேண்டும். ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த அந்த இளம்பெண் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய நிதி உதவி வழங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.