கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மையின் தலைமையை மாற்ற முடிவு; சித்தராமையா
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்பதால் பசவராஜ் பொம்மையின் தலைமையை மாற்ற முடிவு செய்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
புதிய முகங்களுக்கு வாய்ப்பு
பா.ஜனதா கட்சியில் தான் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், குஜராத், டெல்லி மாநகராட்சி தேர்தலில் புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், 2 முறை கவுன்சிலர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை, புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிப்பதே பா.ஜனதாவின் மிகப்பெரிய வெற்றியின் பலம் என்று பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறி இருந்தார்.
அதாவது தலைமையில் மாற்றம் செய்யப்படும் என்பது குறித்து பி.எல்.சந்தோஷ் சூசகமாக கூறி இருந்தார். இதனால் பசவராஜ் பொம்மை மாற்றப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை...
பா.ஜனதா கட்சியில் எப்போதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும். பசவராஜ் பொம்மை ஜனதா பரிவாரில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். நம்முடன் தான் ஜனதா பரிவாரில் பசவராஜ் பொம்மை இருந்தார். அவர். ஆர்.எஸ்.ஆர். அமைப்பை சேர்ந்தவர் இல்லை. அதனால் தான் பசவராஜ் பொம்மையின் தலைமையை மாற்ற பா.ஜனதா முடிவு செய்துள்ளது. காங்கிரசில் வாரிசு அரசியல் இருப்பதாகவும் பி.எல்.சந்தோஷ் கூறி இருக்கிறார். பா.ஜனதாவில் வாரிசு அரசியல் இல்லையா?.
எடியூரப்பா யார்?, அவரது மகன் ஒருவர் என்னவாக இருக்கிறார்?. மற்றொருவர் என்ன பதவியில் இருக்கிறார்? என்பது பி.எல்.சந்தோசுக்கு தெரியவில்லையா?. எனவே வாரிசு அரசியல் பற்றி பேச பி.எல்.சந்தோசுக்கு தகுதி இல்லை. மாநிலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது. எப்போதும் பணம், பணம் என்றே இருக்கிறார்கள். பணம் கொடுத்து அரசு பணிக்கு வருபவர்கள் சரியாக பணியாற்றுவார்களா?. மாநிலத்தில் அரசு இருப்பதே தெரியவில்லை. பா.ஜனதாவுக்கு ஆட்சி நிா்வாகம் செய்யவே தெரியவில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.