ஓவியப்பயிற்சி முகாமில் திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி மாணவர்கள்
ஓவியப்பயிற்சி முகாமில் பள்ளி மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.;
பெரம்பலூர்
உலக ஓவிய தினத்தை முன்னிட்டு திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம், ஜவஹர் சிறுவர் மன்றம் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்பயிற்சி முகாமினை பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நேற்று நடத்தியது. முகாமினை திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குனர் மு.க.சுந்தர் தொடங்கி வைத்தார். ஜவஹர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரும், அரசு இசைப்பள்ளியின் தேவார ஆசிரியருமான நடராஜன் முன்னிலை வகித்தார். ஓவிய ஆசிரியர்கள் ஹேமா, சுந்தரமூர்த்தி ஆகியோர் முகாமிற்கு வந்திருந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய வரைதல் குறித்து பயிற்சி அளித்தனர். அவர்களுக்கு ஓவியம் வரைய தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளும், ஜவஹர் சிறுவர் மன்ற உறுப்பினர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓவிய பயிற்சியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவ- மாணவிகள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஐந்து சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் காட்சிப்படுத்த அனுப்பப்பட்டுள்ளது.