தனியார் நிறுவன ஊழியரிடம் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 2 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரிடம் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்,
கரூர் ஆத்தூர் பிரிவு அமிர்தாம்பால் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மிஷின் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது ஆத்தூர் பிரிவு அருகே அவரை வழி மறித்த 2 மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் லோகநாதன் பணம் தர மறுக்கவே அவரது மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த மோகன்ராஜ் (19), கார்வாடியை சேர்ந்த ஆகாஷ் (21) என்பவரது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.