தொப்பூர் அருகே காரில் கடத்திய ரூ15 கோடி ஹெராயின் பறிமுதல் பெண்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை
தொப்பூர் அருகே காரில் கடத்திய ரூ.15 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே காரில் கடத்திய ரூ.15 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரகசிய தகவல்
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தர்மபுரி வழியாக மதுரைக்கு காரில் ஹெராயின் கடத்துவதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு (மதுரை) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகேயுள்ள குறிஞ்சி நகர் சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை செய்தனர். அதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஹெராயின் பறிமுதல்
அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மதுரைக்கு சுற்றுலா செல்வதாக தெரிவித்தனர். எனினும் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 3 கிலோ ஹெராயினை பதுக்கி கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து ஹெராயின் மற்றும் காரை, நல்லம்பள்ளி தாசில்தார் பெருமாள் முன்னிலையில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
உத்தரபிரதேசத்தில் இருந்து மதுரைக்கு ஹெராயினை விற்பனை செய்ய அனுப்பி வைத்தது யார்? இவர்களுக்கு எப்படி இவ்வளவு ஹெராயின் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹெராயின் கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரும் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் ரூ.15 கோடி மதிப்பிலான ஹெராயின் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.