வேப்பனப்பள்ளி அருகே ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி பொதுமக்கள் சாலை மறியல்

வேப்பனப்பள்ளி அருகே ஏலசீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Update: 2022-05-01 18:55 GMT
வேப்பனப்பள்ளி:
ஏலச்சீட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வி.மாதேப்பள்ளி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.. இவரிடம் வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர், பேரிகை, பாகலூர் மற்றும் கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த ஏராளமானவர்கள் சீட்டு கட்டி வந்தனர். கடந்த 6 மாதங்களாக கட்டிய சீட்டு பணத்தை தராமல் கிருஷ்ணமூர்த்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த மாதம் குடும்பத்துடன் தலைமறைவானார். இதை அறிந்து சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரிடம் புகார் செய்தனர். மேலும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசிலும் புகார் செய்தனர். ஆனால் போலீசார் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கிருஷ்ணமூர்த்தி வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கிருஷ்ணகிரி-வேப்பனப்பள்ளி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார்  விரைந்து வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது சீட்டு பணம் மோசடி குறித்து புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 
போக்குவரத்து பாதிப்பு
அப்போது கிருஷ்ணமூர்த்தியை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்