டாஸ்மாக் கடை அருகே தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது
நொய்யல் டாஸ்மாக் கடை அருகே தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நொய்யல்,
தகராறு
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே மசக்கவுண்டன்புதூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 21). இவர் காகித ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வேலாயுதம்பாளையம் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (19). அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (22). இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர்கள் 3 பேரும் மசக்கவுண்டன் புதூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த தினேஷ் என்பவரை தமிழரசன் உள்பட 3 பேரும் சேர்ந்து அடித்துள்ளனர். இதனை அங்கு நின்று கொண்டிருந்த சிவசாமி என்பவர் எதுக்காக அடிக்கிறிர்கள் என்று 3 பேரிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து சிவசாமியை தாக்கினார். அதேபோல் பிரவீன் குமார், விநாயக மூர்த்தி ஆகியோர் பீர்பாட்டிலை எடுத்து சிவசாமியை குத்தியுள்ளனர். இதில் சிவசாமி படுகாயம் அடைந்தார்.
3 பேர் கைது
இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த சிவசாமியை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து, சிவசாமியை தாக்கி காயம் ஏற்படுத்திய தமிழரசன், பிரவீன்குமார், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்து, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.