தளியில் குதிரையை கடித்து குதறிய மர்ம விலங்கு

தளியில் குதிரையை கடித்து குதறிய மர்ம விலங்கு: வனத்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

Update: 2022-05-01 18:55 GMT
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி  அருகே உள்ள பேளாளம் நெல்லுமார் சாலையில் பெங்களூருவை சேர்ந்த அல்லி உல்லாகான் என்பவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் உள்ளது. இந்த பண்ணையில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் வளர்த்து வருகிறார். இதில் 5 வயது மதிக்கத்தக்க பெண் குதிரை கடந்த சில நாட்களாக  சேட்டை செய்து வந்ததால் பணியாளர்கள்  முன்னங்கால்களை கட்டி போட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பண்ணைக்குள் நுழைந்த மர்மவிலங்கு ஒன்று குதிரைகளை தாக்க முயன்றுள்ளது. அப்போது அனைத்து குதிரைகளும் மர்ம விலங்கிடம் இருந்து தப்பித்து ஓடி விட்டன. இதில் கால்கள் கட்டப்பட்ட பெண் குதிரை நடக்க முடியாமல் அங்கேயே நின்றது. இதையடுத்து மர்மவிலங்கு அந்த குதிரை மீது பாய்ந்து கழுத்தை கடித்து குதறியது. இதில் குதிரை செத்தது.இந்தநிலையில் நேற்று காலை பண்ணைக்கு வந்த பணியாளர்கள் பெண் குதிரை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பண்ணை உரிமையாளர் அல்லி உல்லாகானுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் குதிரையை தாக்கி கொன்றது சிறுத்தையா? அல்லது புலியா? என வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனைத்தொடர்ந்து குதிரையை கொன்ற மர்ம விலங்கு எது என்பதை கண்டறிய உயிரிழந்த குதிரையில் உடலை எடுக்காமல் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தொடர்ந்து கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்