பாரூர் ஊராட்சியில் இளம்வயது திருமணங்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை
இளம்வயது திருமணங்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று பாரூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.;
காவேரிப்பட்டணம்:
கிராம சபை கூட்டம்
தொழிலாளர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாரூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொது நிதியில் இருந்து 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மேற்கொண்ட செலவின அறிக்கை கிராம சபையில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்து வாசிக்கப்பட்டது.
குடிநீர், மின்சாரம், மூலதன பணிகள், இதர நிர்வாக செலவினங்கள் குறித்தும், ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-
நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கிராமசபை கூட்டங்களில் தங்களின் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றாக நிதிநிலைமைக்கு ஏற்றவாறு செய்து தரப்படும். இந்த கிராமத்திற்கு கூடுதலாக குடிநீர் வழங்கவும், வண்டல் மண் எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கிராமத்தில் உள்ள பொது சுகாதார மையம் மற்றும் இந்த ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும். அதேபோல இளம் வயது திருமணம் முற்றிலும் தடுக்க வேண்டும். இக்கிராம சபை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் படிபடியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் ஈஸ்வரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், ஆவின் பொது மேலாளர் வசந்தகுமார், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சங்கர், தாசில்தார் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி, துணை தலைவர் ரவிகுமார், ஊராட்சி செயலர் தமிழரசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.