ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை
ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சூளகிரி:
குடும்ப தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள வேம்பள்ளியை சேர்ந்தவர் முனிரத்தினம்மா (வயது 60). இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது. இதனால் முனிரத்தினம்மா கடந்த 6 மாதமாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த முனிரத்தினம்மா விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முனிரத்தினம்மா இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை
ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சங்கீதா (வயது 31). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த சங்கீதா விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
தனியார் நிறுவன உரிமையாளர்
ஓசூர் தோட்டகிரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ் (வயது 41). இவர் ஓசூரில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த பிரதீப் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் ஊழியர்
காரைக்கால் வரிசைகுடி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் கலைவாணி (வயது 22). இவர் ஓசூர் டி.வி.எஸ். நகர் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி உத்தனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப அலுவலராக பணியாற்றி வந்தார்.வேலைப்பளு இவருக்கு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இவர் ஒருவரை விரும்பி காதல் தோல்வியானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கலைவாணி, தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.