முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி பாகுபாடின்றி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி பாகுபாடின்றி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

Update: 2022-05-01 18:22 GMT
கலவை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி பாகுபாடின்றி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

கிராமசபை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள குப்பிடிசாத்தம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரேசன் வரவேற்றார். ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஜீவா குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள், செலவுகள், வேலை உறுதியளிப்பு திட்டம், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அமைச்சர் கூறினார்.

ஒரு பெண் தனது 3 வயது குழந்தைக்கு உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் பைப்புமூலமாக உணவு வழங்கி வருவதாகவும், எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதற்கு அமைச்சர் உடனடியாக அருகில் உள்ள அங்கன்வாடி அல்லது சத்துணவு மையங்களில் வேலை வழங்கப்படும் என உறுதி கூறினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-

கட்சி பாகுபாடின்றி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி பாகுபாடின்றி அனைவருக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். 500 வாக்குறுதிகளில் 250 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு பணிகளில் முறைகேடு, தாமதம் என புகார் தெரிவித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் ஊராட்சி உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ வெங்கடாஜலம், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, கலவை தாசில்தார் ஷமீம், மாவட்ட கவுன்சிலர்கள் சிவக்குமார், தன்ராஜ், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுந்தரமூர்த்தி. குப்பிடிசாத்தம் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஷீலா ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்