வாலிபர் கொலை வழக்கில் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் கைது

ஆஸ்பத்திரியில் புகுந்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-01 18:06 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் கரியன் என்கிற முகிலன் (வயது 21), தொழிலாளி. இவரது நண்பர் ராஜேஷ் (19). இவர்களுக்கும், டி.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்த சுரேஷ் (31), கவாப் என்கிற சுரேஷ் (54), லோகேஷ் மற்றும் சக்தி ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முகிலன் கத்தியால் குத்தப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தையல் போட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது டி.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்த திருப்பத்தூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுரேஷ், கவாப் என்கிற சுரேஷ், லோகேஷ், சக்தி ஆகிய 4 பேரும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று முகிலனை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே நடந்த தகராறில் காயமடைந்து சுரேஷ் திருப்பத்தூரிலும், கவாப் என்கிற சுரேஷ் வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்