நெடுஞ்சாலை பகுதியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் பொதுமக்கள் அவதி

திருவாரூரில் நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Update: 2022-05-01 18:45 GMT
திருவாரூர்:-

திருவாரூரில் நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 

மருத்துவக்கழிவுகள்

மருத்துவக்கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம் மருத்துவ கழிவுகளின் உற்பத்தியையும், அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைக்க முடியும். 
எனவே ஆஸ்பத்திரிகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக்கழிவுகளை முறையாக கையாளுவது குறித்து பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

நோய் பரவ...

இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்படும் கையுறை உள்ளிட்ட பல்வேறு மருத்துவக்கழிவுகள் விதிமுறைகளை மீறி திருவாரூர் அருகே தண்டலை தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கொட்டப்படுகிறது. இந்த மருத்துவக்கழிவுகளால் பெரும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. 
இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மருத்துவக்கழிவுகளை முறையாக அகற்றாமல், ஆஸ்பத்திரி வாளகத்தை விட்டு வெளியில் அதுவும் மக்கள் அதிகம் போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கொட்டுவது நோய்கள் பரவ வழிவகுக்கும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் இந்த கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் புகை மூட்டம் ஏற்படுவதால் சுவாச பிரச்சினை ஏற்படுவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகின்றனர். 
எனவே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்