மின்வெட்டு பிரச்சினை நிலக்கரி தட்டுப்பாட்டை கணித்து செயல்பட தவறிவிட்டார்கள் தமிழக அரசு மீது டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மின்வெட்டு பிரச்சினை நிலக்கரி தட்டுப்பாட்டை கணித்து செயல்பட தவறிவிட்டார்கள் தமிழக அரசு மீது டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டினாா்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னரும், தமிழக அரசும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர்களே, அவர்கள் ரெயில் தண்டவாளம்போல இணைந்து செயல்பட வேண்டும்.
அப்போதுதான் தமிழகத்துக்கு முன்னேற்றம் கிடைக்கும். இவர்களுக்குள் பிரச்சினை வரக்கூடாது, யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கக்கூடாது. அதேநேரத்தில் கவர்னர், தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டு பொதுமக்களையும், தேர்வு எழுதும் மாணவர்களையும் பெரிதும் பாதித்துள்ளது. இந்திய அளவில் நிலக்கரி தட்டுப்பாடு இருந்தாலும் இதுகுறித்து முன்னரே கணித்து செயல்பட தமிழக அரசு தவறி விட்டது.
ஆகையால் இதன் பிறகும் தாமதிக்காமல் மின்வெட்டை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசை மத்திய அரசு விலை குறைக்க சொல்வது ஏற்புடையது அல்ல. ஏனெனில் மத்திய அரசுதான் பெட்ரோல்- டீசல் மீது அதிக வரி விதிக்கிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் தற்போது காவல்நிலைய மரணங்கள் ஏற்படுவது வேதனை அளிக்கிறது. இதனை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.