அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.
திருப்பத்தூர்
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.
கிராம சபை கூட்டம்
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் புதூர்நாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர்அமர்குஷ்வாஹா கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
புதூர் நாடு ஊராட்சியை வறுமையில்லாத ஊராட்சியாகவும், அனைவரும் நலமோடு வாழ்வதற்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி, அனைவருக்கும் குடிநீர், குடியிருப்பதற்கு வீடுகளை வழங்க வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகள் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள்
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொது மக்களுக்கு தேவையான அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 400 அங்கன்வாடி மையங்களுக்கு கழிப்பிட வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைபடும் பகுதியில் அங்கன்வாடி மையங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. எனவே சுகாதாரத்துறை பணியாளர்கள் அவர்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்கி அதனை சரிசெய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற பல்வேறு திட்டங்களை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.5 கோடி வரை தொழில் தொடங்க மானியத்தில் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
களையெடுக்கும் கருவி
அதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் 2 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் மானியத்தில் களை எடுக்கும் கருவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, ஒன்றியக்குழு தலைவர் விஜயா அருணாசலம், வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஜயகுமாரி, உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சத்தியவாணி வில்வம், புதூர்நாடு ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.