ஆசிரியை வீட்டில் 17½ பவுன் நகை கொள்ளை
மார்த்தாண்டம் அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 17½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 17½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அரசு பள்ளி ஆசிரியை
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பறக்கவிளாகத்தை சேர்ந்தவர் ஹரீந்திரன் (வயது 54), ஓய்வு பெற்ற ராணுவவீரர். இவருடைய மனைவி சுனிதா. இவர் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இதற்காக கணவன்-மனைவி இருவரும் ராதாபுரத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு வந்து வீட்டில் வசிப்பது வழக்கம்.
கொள்ளை
அதன்படி நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் விரிகோட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்தபோது அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 17½ பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள் நகைகளை திருடி விட்டு பின்பக்க கதவு வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.
போலீஸ் தேடுகிறது
இந்த சம்பவம் தொடர்பாக ஹரீந்திரன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மர்மஆசாமிகளின் உருவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆசிரியைக்கு நன்கு தெரிந்த நபர்கள் கைவரிசை காட்டினார்களா? அல்லது வெளியூரை சேர்ந்த கொள்ளையர்கள் திருடினார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவருகிறார்கள். ஆசிரியை வீட்டில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.