மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; வாலிபர் பலி

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார். நண்பர்கள் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-05-01 17:31 GMT
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார். நண்பர்கள் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நண்பர்கள்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவருடைய நண்பர்கள் கோட்டார் செட்டித்தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (26), நாகர்கோவில் தட்டான்விளையை சேர்ந்த ருத்திரன் (26). நண்பர்கள் 3 பேரும் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள கார்,டெம்போ பழுது பார்க்கும் ஓர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வருகின்றனர். 
இந்தநிலையில் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்வ ஆலயத்துக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நண்பர்கள் 2 பேரையும் மணிகண்டன் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்றார்.  
பஸ் மோதியது
கோவிலில் இரவு தங்கி விட்டு நேற்று பகல் 12 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். நண்பர்கள் இவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். 
தோவாளையை அருகே உள்ள விசுவாசபுரத்தை கடந்து சென்றபோது, எதிரே வந்த அரசுபஸ் திடீரென மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
 வாலிபர் பலி
பஸ் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் முன்பகுதியின் கீழ் சிக்கிக்கொண்டது. மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் பஸ்சின் முன்பகுதியில் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தினேஷ்குமார், ருத்திரன் ஆகிய 2 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். 
இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவின்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
சோகம்
பின்னர், விபத்தில் பலியான மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விபத்து காரணமான அரசுபஸ் டிரைவரான களியக்காவிளையை சேர்ந்த சாமுவேல் சாந்தராஜ்(38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் சென்ற வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்