உரிய காலத்தில் மனு செய்து நிவாரண நிதியுதவி பெற வேண்டும்
கொரோனாவினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உரிய காலத்தில் மனு செய்து நிவாரண நிதியுதவி பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பின்னர் அவை வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதிசெய்யும் குழுவின் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் நிவாரண நிதியுதவி வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனாவினால் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதிக்கு முன்னர் ஏற்பட்ட இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 18-ந் தேதிக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் மாதம் 20-ந் தேதிக்கு பின்னர் கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே கொரோனாவினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயன் அடைந்து கொள்ளலாம்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.