மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறக்க வேண்டும்
மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறக்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை
கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க நிறுவன தலைவர் என்.ஜி.ராமசாமியின் 111-வது பிறந்தநாள் விழா, சங்கத்தின் 85-வது ஆண்டு விழா, மே தினவிழா ஆகிய முப்பெரும் விழா கோவை சிங்காநல்லூரில் நடந்தது. தலைவர் டி.எஸ்.ராஜாமணி தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் ஜி.மனோகரன் (பொறுப்பு) வரவேற்றார். மாவட்ட தலைவர் கே.வீராச்சாமி கொடியேற்றினார்.
அரசு போக்குவரத்து தொழிலாளர் எச்.எம்.எஸ்.பேரவை பொருளாளர் தர்மராஜன், கோவை மண்டல கட்டுமான தொழிலாளர் எச்.எம்.எஸ். சங்க செயல் தலைவர் பழனிசாமி, ஸ்டாப் யூனியன் தலைவர் பழனிசாமி, எச்.எம்.எஸ். மாநில அமைப்பு செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
நாடு முழுவதும் உள்ள 23 தேசிய பஞ்சாலைகளை (என்.டி.சி. மில்) கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி முதல் மூடப்பட்டது. இதனால் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை உடனடியாக திறப்பதுடன், தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும்.
கோவை சிங்காநல்லூரில் அமைக்கப்படும் மேம்பாலத்தை ஒண்டிப்புதூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணை தலைவர் சண்முகம் நன்றி கூறினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.