முதலுதவி மருத்துவ சிகிச்சை மையம்
ராமேசுவரம் கோவில் அருகே முதலுதவி மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் அவசரகால தேவைக்காக மருத்துவ முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி கோவில் அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட மருத்துவ மையத்தை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தார். தொடர்ந்து இந்த மையத்தில் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 2 டாக்டர்கள், 2 செவிலியர்கள், ஒரு உதவியாளர் ஆகிய ஐந்து பேருக்கு பணி நியமன ஆணை கடிதத்தையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர் கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திரராமவன்னி, முன்னாள் நகர சபை தலைவர் அர்ஜுனன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கவுன்சிலர்கள் முகேஷ் குமார், சத்யா, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.