ரதவீதி சாலையில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும்
ரதவீதி சாலையில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலின் ரதவீதி சாலையில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் அவதி
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் கோவிலின் ரதவீதி சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் வாகன நிறுத்துமிடம் பகுதியில் இருந்தும் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரதவீதி சாலையில் நடந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. இன்னும் 3 தினங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்குகின்றது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் ரதவீதி சாலைகளில் கடும் வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள், குறிப்பாக வயதான பக்தர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். கோவில் சார்பில் இரண்டு பேட்டரி கார்கள் மட்டுமே இயக்கப்படுவதால் பெரும்பாலான பக்தர்கள் நடந்தே கஷ்டப்பட்டு வரும் நிலைதான் இருந்து வருகின்றது.
கோரிக்கை
மேலும் கோவிலின் ரதவீதி சாலைகளில் மேற்கூரைகள் இல்லாத காரணத்தால் சிறிது நேரம் நின்று செல்ல நிழல் வசதி கூட இல்லாததால் பக்தர்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். பக்தர்கள் வரும் வாகனங்கள் ரதவீதி சாலையில் செல்ல வர தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அரசு அதிகாரிகள் குடும்பத்தோடு வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல கிழக்கு வாசல் வரையிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே கோவிலின் ரதவீதி சாலையில் வெயிலின் சீசன் முடியும் வரையிலாவது மேற்கூரை அமைப்பதோடு, பக்தர்களின் வசதிக்காக கோவில் சார்பில் ரதவீதி சாலைகளில் கூடுதலாக பேட்டரி கார்களை இயக்கவும், பக்தர்கள் வாகனங்கள் ரதவீதிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல் அரசு அதிகாரிகள் குடும்பத்தினர் வரும் வாகனங்களையும் தடைவிதித்து அனைவருக்கும் பொதுவான விதிமுறைகளை பின்பற்ற செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.