சென்னப்பட்டணா தாசில்தார் பணி இடமாற்றத்தில் குமாரசாமி, சி.பி.யோகேஷ்வர் இடையே மோதல்
சென்னப்பட்டணா தாசில்தார் பணி இடமாற்றத்தில் குமாரசாமி மற்றும் சி.பி.யோகேஷ்வர் இடையே மோதல் உருவாகி இருக்கிறது.
பெங்களூரு:
தாசில்தார் பணி இடமாற்றம்
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாசில்தாராக இருந்தவர் நாகராஜ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தாசில்தாராக கடந்த மாதம்(ஏப்ரல்) 29-ந் தேதி சுதர்சன் என்பவர் நியமிக்கப்பட்டாா். இந்த நிலையில், தாசில்தாராக இருந்த சுதர்சனும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்ஷவர்தன் என்பவரை தாசில்தாராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது 15 நாட்கள் இடைவெளியில் சென்னப்பட்டணாவுக்கு 3 பேர் தாசில்தாராக இருந்துள்ளனர். இதற்கு காரணம் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் ஆகியோர் இடையே இருக்கும் மோதல் என்று கூறப்படுகிறது.
சென்னப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ.வாக குமாரசாமி இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் சென்னப்பட்டணா தொகுதியில் சி.பி.யோகேஷ்வர் பா.ஜனதா சார்பில் போட்டியிட உள்ளார்.
எனக்கு சம்பந்தம் இல்லை
2 பேரும் தங்களது ஆதரவாளர்களை தாசில்தாராக நியமிக்க திட்டமிட்டு வருவதாகவும், இதனால் தான் சென்னப்பட்டணாவில் அடிக்கடி தாசில்தார் மாற்றப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால்
தாசில்தார் மாற்றத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும், தாசில்தாா் மாற்றத்தால் மக்கள் தான் அவதிப்படுவார்கள், எனவே இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று சி.பி.யோகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி குமாரசாமி கூறுகையில், ‘நான் முதல்-மந்திரியாக இருந்த போது சுதர்சனை தாசில்தாரராக நியமித்தேன். அவர் சரியாக பணியாற்றாத காரணத்தால் மாற்றப்பட்டார். தற்போது நாகராஜை மாற்றிவிட்டு மீண்டும் சுதர்சனை சென்னப்பட்டணா தாசில்தாரை நியமித்தனர். நான் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் போது, என்னை வைத்து கொண்டே ரகசியமாக சுதர்சன் ஆலோசனை நடத்தினார். அவரும் மாற்றப்பட்டு புதியவர் தாசில்தார் ஆகி உள்ளார். இந்த விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை,’’
என்றார்.