ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடப்பது எப்போது
ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடப்பது எப்போது
திருப்பூர்,
திருப்பூர் நல்லூரில் சிவனின் வலது புறத்தில் திருமண கோலத்தில் விசாலாட்சி அம்மன் எழுந்தருளி இருக்கும் ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடப்பது எப்போது என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நல்லூர் ஈஸ்வரன் கோவில்
ஒவ்வொரு ஊரிலும் கம்பீரமாகவும், கலை நயத்துடனும் வானுயர நிற்கும் கோவில் கோபுரங்கள் அந்த ஊருக்கு பெருமை சேர்ப்பதாக அமையும். இவ்வாறு கோபுரங்களுடனும் கலைநயமிக்க சிலைகளுடன் இருக்கும் கோவில்கள் மனதிற்கு நிம்மதியை தருவதுடன், மனிதர்களை மேம்படுத்தும் இடமாகவும் கோவில்கள் விளங்குகிறது.
அந்த வகையில் திருப்பூர் நல்லூரில் பிரசித்தி பெற்ற விஸ்வேசுவரசாமி விசாலாட்சி அம்மன் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். கிழக்கு முகமாக அமைந்துள்ள இந்த கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக விஸ்வேஸ்வரர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். மேலும் விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சன்னதி அமைந்துள்ளது. தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்களில் சிவபெருமானுக்கு இடது புறமாக அம்மன் சன்னதி அமைந்திருக்கும் நிலையில் இந்த கோவிலில் சிவனுக்கு வலது புறமாக திருமணக் கோலத்தில் விசாலாட்சி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இதேபோல் அரிதாக இருக்க கூடிய சரபேஸ்வரர் சிற்பமானது சிவன் சன்னதி சுவற்றில் அமைந்துள்ளது. பில்லி, சூனியம், செய்வினை போன்ற பல தீய விஷயங்களில் இருந்து விடுபட சரபேஸ்வரரை வழிபாடு செய்வது நலம் பயக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
பொலிவிழந்த கோவில்
பெரும்பாலான கோவில்களில் இடம்புரி விநாயகர் இருக்கும் நிலையில் இங்கு கன்னி மூலை பகுதியில் வலம்புரி விநாயகர் சன்னதி உள்ளது. இதேபோல் கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள சப்தரிஷிகள், சப்த கன்னி தெய்வங்களை வணங்குவதால் தீய சக்திகளிடமிருந்து விடுதலை, உடல் ஆரோக்கியம், திருமணத்தடை நீங்குதல் போன்றவை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் கந்த சஷ்டி விரத வழிபாட்டின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் பக்தர்கள் நம்புகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோவிலானது சரியான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதன் காரணமாக கோவிலில் கம்பீரமாக இருக்கும் ராஜ கோபுரம் தற்போது பொலிவிழந்து வருகிறது. கோவிலின் சுற்று சுவர் விரிசல் விழுந்து வலுவிழந்த நிலையில் காணப்படுகிறது. இதேபோல் கோவிலின் வெளியே உள்ள படிக்கட்டுகள் உடைந்து, பக்தர்கள் நடக்க முடியாத அளவிற்கு கற்கள் அங்கும் இங்குமாக மேலெழும்பியவாறு உள்ளது.
பக்தர்கள் வேதனை
கோபுரத்தில் உள்ள சிலைகளில் புறா, காகம் உள்ளிட்ட பறவைகள் அதிகம் அமர்வதால் அவற்றின் எச்சங்கள் படிந்து மிக மோசமான நிலையில் கோபுரம் உள்ளது. மேலும் கோபுரத்தில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்து நிற்கின்றன. திருப்பூரில் பிரசித்தி பெற்ற கோவில் இவ்வாறு பல வருடங்களாக கவனிப்பாரின்றி விடப்பட்டுள்ளது பக்தர்களை கவலையடைய செய்துள்ளது. இந்த கோவிலை புணரமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடந்துள்ளது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல், கலையிழந்த கோவில் மீண்டும் புதுப்பொலிவு பெற்று பக்தர்களின் மனம் குளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.