ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்காக மேலும் ஒரு கும்கி யானை வரவழைப்பு

கன்னிவாடி அருகே ஒற்றை காட்டு யானையை விரட்டுவதற்காக மேலும் கும்கி யானை வரவழைக்கப்பட்டது.

Update: 2022-05-01 16:30 GMT
கன்னிவாடி:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ைணப்பட்டி கோம்பை, தருமத்துப்பட்டி கோம்பை, அழகுமடை, அமைதிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த ஒருவாரத்திற்கு முன்பு காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு காவலர் சுந்தரம் என்பவரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்திற்கு சென்ற மாணவர்களை பின்தொடர்ந்து காட்டு யானை வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மலைக்கிராம மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மேலும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 நாட்களுக்கு முன்பு கலீம் என்ற கும்கி யானை, நீலகிரி மாவட்டம் டாப்சிலிப்பில் இருந்து வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்த யானை மூலம் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டு யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து மேலும் ஒரு கும்கி யானையை வரவழைக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, நீலகிரி மாவட்டம் டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி என்ற மற்றொரு கும்கி யானை நேற்று கன்னிவாடிக்கு வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பண்ணைப்பட்டி கோம்பை, தருமத்துப்பட்டி கோம்பை பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதிலும், வேட்டை தடுப்பு காவலரை கொன்ற ஒற்றை காட்டு யானையை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்