தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளிக்கு அடி-உதை; 2 பேர் கைது
வேடசந்தூர் அருகே தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளிக்கு அடித்து, உதைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேடசந்தூர்:
தாடிக்கொம்பு அருகே பள்ளப்பட்டியில் உள்ள மேட்டூர் மாரியம்மன், பகவதியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 28-ந்தேதி நடந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த சந்துரு, பிரகாஷ், ரூபன், கணேஷ், சுரேஷ், பிரபு, தனுஷ், தேசிங்குராஜா, ரமேஷ் ஆகிய 9 வாலிபர்கள், கோவிலில் இருந்த வேல் கம்பை பிடிங்கி தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது திருவிழாவிற்கு சாமி கும்பிட வந்த திருப்பூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான அகரமுத்து (38), தகராறை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் அகரமுத்துவை உருட்டுக்கட்டையால் தாக்கியதுடன், அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் 9 வாலிபர்கள் மீது வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் அவர்களில் தேசிங்குராஜா (19), ரமேஷ் (19) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான மற்ற 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.