தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் கைரேகை பதிக்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடியில் மழைக்கால நிவாரணத்துக்கான அரசாணை வெளியிட வலியுறுத்தி உப்பள தொழிலாளர்கள் நேற்று கைரேகை பதிக்கும் நிகழ்ச்சி நடத்தினர்.

Update: 2022-05-01 16:10 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மழைக்கால நிவாரணத்துக்கான அரசாணை வெளியிட வலியுறுத்தி உப்பள தொழிலாளர்கள் நேற்று கைரேகை பதிக்கும் நிகழ்ச்சி நடத்தினர்.

தொழிலாளர் தினம்
உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால் தமிழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தக்கோரி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ராஜபாண்டிநகரில் உப்பள தொழிலாளர்கள் கைரேகை பதிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தொடர்ந்து உப்பளத்தில் வைத்து உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய பதாகையில் உப்பள தொழிலாளர்கள் கை ரேகை பதித்தும், கையொப்பமும் இட்டனர்.

கையெழுத்து பிரசாரம்
மேலும் உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வுரிமை கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து பிரசாரமும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராணி, கனி, குமார் மற்றும் உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பூரணம், பர்மெல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்