கிராமசபை கூட்டத்தை திடீரென முடித்துக்கொண்டதால் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
பந்தலூர் அருகே கிராமசபை கூட்டத்தை திடீரென முடித்துக்கொண்டதால் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி சார்பில் காவயல் அரசு பள்ளியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் லில்லிஏலியாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சந்திரபோஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஸ், சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி, கூடலூர் வேலாண்மை பொறியல்துறை உதவி பொறியாளர் கமலி, வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார் அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தார் சாலை, தெருவிளக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டிதரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது திடீரென்று கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றதாக தெரிவித்ததோடு, அதிகாரிகள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இதுதொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.