கூடலூரில் நடுவழியில் பழுதடைந்து நின்ற அரசு பஸ்
கூடலூரில் நடுவழியில் பழுதடைந்து நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதிப்பட்டனர்.
கூடலூர்
கூடலூரில் நடுவழியில் பழுதடைந்து நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதிப்பட்டனர்.
பழுதடைந்து நிற்கும் அரசு பஸ்கள்
நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பெரும்பாலனவை மிகவும் மோசமாக உள்ளது. இதேபோல் கூடலூரில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் பஸ்களும் பழுதடைந்து பயணிகளை அவதிக்குள்ளாகி வருகிறது.
கடந்த வாரம் பந்தலூர் தாலுகாவில் ஒரே நாளில் 3 பஸ்கள் பழுதடைந்து நின்றது. இதனால் பயணிகள் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தொடர்ந்து பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பயணிகளுடன் கூடலூரில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே வந்தவுடன் பஸ்சின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
பயணிகள் அவதி
இதனால் சாலையோரம் பஸ் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பஸ்சை சீரமைக்கும் பணியில் டிரைவர் மற்றும் போக்குவரத்து பணிமனை ஊழியர் ஒருவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இருப்பினும் உடனடியாக சீரமைக்க முடியவில்லை. இதனால் பொறுமை இழந்த பயணிகள் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கினர். தொடர்ந்து சாலையோரம் உட்கார்ந்து இருந்தனர்.
பின்னர் அந்த வழியாக கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல கூடிய பஸ்களை நிறுத்தி பயணிகளை அதில் ஏற்றி கண்டக்டர் வழியனுப்பி வைத்தார். கூடலூர் பகுதியில் அரசு பஸ்களால் பயணிகள் தினமும் அவதிப்படும் அவல நிலை தொடர்கிறது. எனவே அதிகாரிகள் அரசு பஸ்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.