உளுந்தை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடக்க விழா - எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்பு
உளுந்தை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்து எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரும், கடம்பத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவருமான எம்.கே.ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்து அங்கிருந்த பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
இதில் உளுந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் வசந்தா, கட்சி நிர்வாகிகள் மேகவர்ணன், கோபால், ஊராட்சி செயலாளர் பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.