திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-05-01 06:01 GMT
திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட என்.என்.கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி (வயது 64). விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மேலும், அதே மர்ம நபர்கள் ராமமூர்த்தி வீட்டிற்கு அடுத்தடுத்த உள்ள இரண்டு வீடுகளில் வசிக்கும் பிரபாகரன் (75), லலிதா (85) ஆகியோர்களின் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். இரண்டு வீடுகளிலும் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் எதுவும் கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து, திருடர்கள் புகுந்த வீடுகளுக்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்