ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.35 லட்சத்தை இழந்தவர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.35 லட்சத்தை இழந்தவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
சென்னை போரூர், விக்னேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரபு (வயது 39). இவருடைய மனைவி ஜனனி என்ற இந்து (36). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பிரபுவை, அந்த நிறுவனம் வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாக தெரிகிறது.
இதனால் கடந்த சில வருடங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த பிரபு, குடிப்பழக்கத்துக்கு ஆளானார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த ஜனனி, வீட்டில் தனது கணவர் பிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போரூர் போலீசார், தூக்கில் தொங்கிய பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த பிரபு, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.35 லட்சத்தை இழந்திருப்பது தெரிந்தது. அதில் ரூ.15 லட்சத்தை கிரெடிட் கார்டு மூலமாக வங்கியில் கடன் பெற்று உள்ளார். மீதி ரூ.20 லட்சம், வீட்டு கடனை அடைக்க அவரது தந்தை கொடுத்த பணமாகும்.
இதையறிந்த ஜனனி அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் வாங்கிய கடனை அடைக்கும்படி வங்கியில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த பிரபு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.