வீட்டை விற்பதாக ரூ.64 லட்சம் மோசடி: சகோதரர்கள் கைது

சென்னை மயிலாப்பூரில் வீட்டை விற்பதாக கூறி ரூ.64 லட்சம் மோசடி செய்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-01 05:16 GMT
சென்னை, 

சென்னை மயிலாப்பூர் பங்காரம்மாள் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 49). இவரிடம், மயிலாப்பூர் சிதம்பரசாமி கோவில் 2-வது தெருவை சேர்ந்த ரமேஷ், அவரது சகோதரர் சுரேஷ் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 3 அடுக்குமாடி குடியிருப்பு, வங்கியில் அடமானத்தில் இருப்பதாகவும், அதனை மீட்டு விலைக்கு வாங்கி கொள்ளுமாறு தெரிவித்தனர்.

அதன்பேரில் கோவிந்தராஜ், கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல தவணைகளாக ரூ.64 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சகோதரர்கள், வீட்டை பத்திரம் செய்து கொடுக்காமல், வேறு ஒருவருக்கு விற்பனை செய்தனர். இதுகுறித்து கோவிந்தராஜ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரமேஷ் (46), அவரது சகோதரர் சுரேஷ் (42) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்