வீட்டில் பதுக்கிய 414 கிலோ குட்கா பறிமுதல் - 2 வாலிபர்கள் கைது
சென்னை தியாகராயநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 414 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை தியாகராயநகர் சித்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாம்பலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். இதில் அங்கு 414 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது ரில்வான் (வயது 22), திருவல்லிக்கேணியை சேர்ந்த தமீமுல் அன்சாரி (24) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.63 ஆயிரத்து 540 மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.