பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் ஏற்காட்டுக்கு கொண்டு செல்ல தடை-போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவு
பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் ஏற்காட்டுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டுள்ளார்.;
சேலம்:
பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் ஏற்காட்டுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் பைகள்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட போலீசார் சார்பில் மாசில்லா ஏற்காடு-2022 என்ற விழிப்புணர்வு தொடக்க நிகழ்ச்சி நேற்று ஏற்காடு மலை அடிவாரத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் கலந்து கொண்டு விழிப்புணர்வு அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சுற்றுலாத்தலமான ஏற்காட்டை பாதுகாப்பது நமது கடமையாகும். இயற்கையை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் ஏற்காட்டுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். மீறி கொண்டு வந்தால், அடிவார பகுதியில் உள்ள போலீசார் சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்வார்கள்.
அபராதம்
இதேபோல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுபவர்கள் அதை கண்ட இடங்களில் வீசக்கூடாது. முறையாக குப்பை தொட்டியில் போட வேண்டும். அப்படி செய்தால் முறைப்படி அப்புறப்படுத்தி மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சின்னதம்பி மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து மலைப்பாதையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காலியாக கிடந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினர்.