ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் கேபிள் ஒயர் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு; வாகனங்கள் செல்ல உதவிய 3 மாணவர்களுக்கு பாராட்டு

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் கேபிள் ஒயர் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் செல்ல உதவிய 3 மாணவர்களுக்கு பாராட்டு தொிவிக்கப்பட்டது.

Update: 2022-04-30 22:23 GMT
ஈரோடு
ஈரோடு காளைமாடு சிலை அருகில் கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ரெயில்வே நுழைவுபாலம் அருகே ரோட்டின் நடுவே கேபிள் ஒயர் அறுந்து கீழே விழுந்தது.
இதனால் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது அந்த வழியாக வந்த கொல்லம்பாளையம் பீமன் காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சண்முகராஜன், கோபி மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் தமிழரசன் ஆகிய 3 சிறுவர்களும் கேபிள் ஒயரை இழுத்து தூக்கி பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து ரோட்டின் இருபுறமும் நின்ற ஏராளமான வாகனங்கள் அந்த வழியாக கடந்து சென்றன. சிறுவர்களின் இந்த செயலை வாகன ஓட்டிகள் பாராட்டினர்.
அதைத்தொடர்ந்து போக்குவரத்து துறை போலீசார் விரைந்து வந்து கேபிள் ஒயரை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. மேலும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் அந்த 3 சிறுவர்களையும் அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டினார்.

மேலும் செய்திகள்