‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பை அகற்றப்படுமா?
ஈரோட்டில் இருந்து வெள்ளோடு செல்லும் வழியில் குப்பக்கவுண்டன்பாளையம் உள்ளது. அந்த பகுதியில் குப்பைகள் எடுத்து செல்லப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அருகில் உள்ள சிவன் நகர் பகுதியில் இருந்தும் ஒரு மாதமாக குப்பைகளை சேகரித்து எடுத்து செல்லவில்லை. அதுமட்டுமின்றி தெருவிளக்கு மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே குப்பைகளை அகற்றவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீமோன் பேதுரு, சிவன் நகர்.
சாக்கடையை தூர்வார வேண்டும்
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் பின்புறத்தில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அந்த பகுதியில் அதிகமாக உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வீரப்பன்சத்திரம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சுற்றுலா விடுதி அருகே செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கார்த்திகேயன், ஈரோடு.
கோரிக்கை ஏற்பு
கோபி திருமலை நகரின் முதல் வீதியில் குடிநீருக்காக குழி தோண்டப்பட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியை மூட சிலாப்புகள் போடப்பட்டன. ஆனால் சிலாப்புகள் சரியாக மூடப்படாமல் இருந்தது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தவறி தொட்டிக்குள் விழும் நிலை இருந்தது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் படத்துடன் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து கோபி நகராட்சி பணியாளர்கள் நேற்று திருமலை நகர் சென்று குடிநீர் தொட்டியில் சரியாக மூடப்படாமல் இருந்த சிலாப்புகளை முறையாக எடுத்து வைத்து சரியாக மூடினர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.
பாராட்டு
கோபி பஸ் நிலையத்தின் மைய பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உயர் கோபுரத்தில் உள்ள மின் விளக்கு எரியவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் இருளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் உயர் கோபுர மின்விளக்கை சரி செய்து மின் விளக்கை எரிய வைத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.