இளம்பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி; பட்டதாரி வாலிபர் கைது
வெளிநாட்டில் நர்சு வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
வெளிநாட்டில் நர்சு வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்
குமரி மாவட்டம் சாமியார்மடம் பகுதியை சேர்ந்தவர் பார்த்லோமியா பிரைஸ் (வயது 27). நர்சிங் படிப்பை முடித்துள்ள இவர் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதில், நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலை தேடி வந்தேன். அப்போது வேலைக்கான விளம்பரம் ஒன்றை கண்டேன். அந்த விளம்பரத்தில் ஒரு செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரூ.15 லட்சம் மோசடி
இதனை தொடர்ந்து அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி எனது கல்வி விவரங்களை தெரிவித்தேன். உடனே எதிர்முனையில் பேசியவர் "வெளிநாட்டில் நர்சு பணி உள்ளதாகவும், இதற்காக ரூ.15 லட்சம் தர வேண்டும். இதில் விசா செலவும் அடங்கும்" என கூறினார்.
மேலும் அந்த நபர் எனது செல்போனுக்கு வங்கி கணக்கு ஒன்றை அனுப்பி அதில் ரூ.15 லட்சத்தை செலுத்துமாறு கூறினார். நானும் அவரது பேச்சை நம்பி பல தவணையாக ரூ.15 லட்சத்தை அந்த வங்கியின் கணக்கில் செலுத்தினேன். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அதன் பிறகு தான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். வெளிநாட்டில் நர்சு வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பட்டதாரி வாலிபர் கைது
அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்ணிடம் பண மோசடி செய்த நபர் சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி அழகுநகரை சேர்ந்த சீனிவாசன் (36) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து சீனிவாசனை பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சீனிவாசன் முதுகலைப்பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.