சீரமைக்கப்பட்டது
தேரேகால்புதூர் ஊராட்சிக்குட்பட்ட புரவசேரி, காந்திநகர் பகுதியில் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் நடக்க முடியாத நிலையில் இருந்தது. இதுபற்றிய செய்தியும், படமும் ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளங்களை மண் போட்டு மூடி சாலையை சரி செய்தனர். செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
குரங்குகள் அட்டகாசம்
தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட கனகமூலம் புதுகுடியிருப்பு பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன. அவை அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்து, உணவு பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. எனவே குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கரன், கனகமூலம் புதுகுடியிருப்பு.
மின் கம்பம் சீரமைக்கப்படுமா?
சரக்கல்விளை சானல்கரையோரத்தில் ஒரு மின் கம்பம் உள்ளது. அதில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் ஒரு வித அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், வேதநககர்.
ஆபத்தான பள்ளம்
நாகர்கோவில் நேசமணி நகரில் இருந்து ராணித்தோட்டம் செல்லும் சாலையில் நெசவாளர் காலனி பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் கவனமாக செல்ல வேண்டும். காத்திருக்கும் ஆபத்தை உணராமல் சென்றால் விபத்தில் சிக்கும் பெரும் பாதிப்பு வரும். எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டேவிட்சன், புத்தளம்.
புதிய அறை கட்ட வேண்டும்
தெற்கு சூரங்குடி பகுதியில் உள்ள சம்பகுளம் அருகில் உடை மாற்றும் அறை உள்ளது. அந்த அறை பராமரிக்கப்படாததால், இடிந்த நிலையில் எப்போது விழலாம் என உள்ளது. எனவே உடை மாற்றுவதற்கு புதிய அறை கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ஆனந்த், திக்கிலான்விளை.
வீணாகும் குடிநீர்
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளை மீன்மார்கெட் அருகே உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. எனவே குடிநீர் குழாயை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துகுமார், ஆடரவிளை.
சுகாதார சீர்கேடு
தோவாளை அருகே வடக்கூர் மாதவநகர் பகுதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பையை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏ.வி.முத்துகிருஷ்ணன், தோவாளை.
நடவடிக்கை அவசியம்
மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பலக்காலை, புலியூர் சாலை, மாங்கோடு, குளவிளை ஆகிய பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இவை விளை நிலங்களுக்குள் புகுந்து மா,பலா, வாழை, கொய்யா பழம், மரவள்ளி கிழங்கு போன்றவற்றை சேதப்படுத்தி வருகின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து குருங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷிஜின், அம்பலக்காலை.