பெட்ரோல்-டீசல் விலை தொடர்பாக பிரதமர் மோடியின் கருத்தை தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும்-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
பெட்ரோல்-டீசல் விலை தொடர்பாக பிரதமர் மோடியின் கருத்தை தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
பெட்ரோல்-டீசல் விலை தொடர்பாக பிரதமர் மோடியின் கருத்தை தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
புதிய நிர்வாகிகள்
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.விற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தலைமையில் புதிய நிர்வாகிகள் நேற்று மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2001-ம் ஆண்டு ஜெயலலிதா எனக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை முதலில் வழங்கினார். அதன்பின் சில மாற்றங்கள் இருந்தாலும் மீண்டும் என்னையே ஜெயலலிதா மாவட்ட செயலாளராக்கினார். என்னை பொறுத்தவரை கட்சிக்கு உழைப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பதவி வாங்கி தருவதை கடமையாக கருதுகிறேன். இந்த தேர்தலில் என்னை எதிர்த்து 4 பேர் போட்டியிட்டனர். அ.தி.மு.க.வில் ஜனநாயகம் இருப்பதால் தான் போட்டி ஏற்படுகிறது. இது தி.மு.க. போன்று குடும்ப கட்சி அல்ல.
குடிநீர் திட்டப்பணிகள்
தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விஷம் போல் ஏறுகிறது. தி.மு.க. எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறது. இது விடியல் ஆட்சி அல்ல. விளம்பர ஆட்சி. மே தின கூட்டம் நாளை (இன்று) செல்லூரில் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. சட்டசபையில் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம், மதுரை மாநகர வளர்ச்சிக்காக குரல் கொடுத்து வருகிறேன். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதே போல் முல்லை பெரியாறு குடிநீர் திட்ட பணிகள் மிக மெதுவாக நடக்கிறது. இது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவிடம் எடுத்து கூறினேன். அவரும் பணியினை விரைவுப்படுத்துவதாக கூறி இருக்கிறார்.
தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். அவர் சரியான கருத்தை தான் சொல்லி இருக்கிறார். அவருடைய இந்த கருத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் கர்நாடகா, புதுச்சேரியில் பெட்ரோல்-டீசல் விலை ரூ.8 குறைவாக இருக்கிறது. அதே போல் தமிழகத்திலும் தமிழக அரசு விலை குறைப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.