மோதலில் காயமடைந்த பிளஸ்-2 மாணவர் சாவு; கொலை வழக்கில் 3 மாணவர்கள் கைது

நெல்லை அருகே அரசு பள்ளியில் நடந்த மோதலில் காயமடைந்த பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-30 20:42 GMT
முக்கூடல்:
நெல்லை அருகே அரசு பள்ளியில் நடந்த மோதலில் காயமடைந்த பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிளஸ்-2 மாணவர் 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 48), விவசாயி. இவருடைய மனைவி உச்சிமாகாளி (42).   இவர்களுக்கு  செல்வசூரியா (17) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர்.

இவர்கள் இருவரும் பாப்பாக்குடி அருகே பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து    வந்தனர்.   செல்வசூரியா பிளஸ்-2 படித்தார்.

கோஷ்டி மோதல்

கடந்த  26-ந்தேதி  செல்வசூரியா வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது இவருக்கும், 11-ம் வகுப்பு மாணவர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதலில் ஈடுபட்டனர்.  ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். 

இதில் எதிர்தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் அங்கு கிடந்த கற்களை எடுத்து செல்வசூரியாவை தலையில் பலமாக தாக்கினர். இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் அங்கு ஓடி வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். மேலும், மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேசியும் சமரசம் செய்தனர். 

பரிதாப சாவு

இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி, 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, தாக்குதலில் காயமடைந்த மாணவர் செல்வசூரியா பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து பாப்பாக்குடி போலீசார் கோஷ்டி மோதல் தொடர்பாக ஏற்கனவே 3 மாணவர்கள் மீது பதிவு செய்திருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட செல்வசூரியாவின் தந்தை முருகன், தாயார் உச்சிமாகாளி மற்றும் உறவினர்கள் பாப்பாக்குடி மெயின் ரோட்டில் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாய் மயக்கம்

அப்போது அவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய 3 மாணவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், கண்டிப்பாக 3 பேரையும் கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட வந்திருந்த செல்வசூரியாவின் தாயார் உச்சிமாகாளி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 மாணவர்கள் கைது

இந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாணவர் செல்வசூரியாவின் உடல் பிரேத பரிசோதைனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பள்ளியில் நடந்த மோதலில் மாணவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து பாப்பாக்குடி, பள்ளக்கால் பொதுக்குடி உள்ளிட்ட இடங்களில் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரான்சிஸ், பொன்னரசு ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, சந்திரமோகன் ஆகியோர் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்