இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி பலி

கும்பகோணத்தில் வீடு கட்டுமான பணியின்போது திடீரென சன்ஷேடு சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2022-04-30 20:25 GMT
கும்பகோணம்;
கும்பகோணத்தில், வீடு கட்டுமான பணியின்போது திடீரென ‘சன்ஷேடு’ சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.   
இடிந்து விழுந்தது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமராஜர் ரோடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய வீட்டின் முதல் தளம் மற்றும் 2-வது தளத்தில் கட்டுமான பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. 
இதில் சன்ஷேடு் அமைக்கும் பணியில் கும்பகோணத்தை அடுத்த திருவாவடுதுறை பகுதியை சேர்ந்த சந்திரமோகன், சுரேஷ், கார்த்தி(45), ஜாகிர் உசேன்(55) உள்ளிட்ட 4 பேர் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட சன்ஷேடு் இடிந்து விழுந்தது. 
மீட்பு பணி
இதில் கார்த்திக் மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். சுரேஷ், சந்திரமோகன் ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். உடனே அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதிநவீன எந்திரங்களின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளை வெட்டி அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். பின்னர் தாங்கள் எடுத்து வந்த கயிறுகளின் உதவியுடன் இடுப்பில் கயிறுகளை கட்டியவாறு அந்தரத்தில் தொங்கியபடி இருவரின் மேல் விழுந்துள்ள கான்கிரீட் சுவர்களை அதிநவீன கருவிகளின் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி உடைத்தனர். 
ஒருவர் பரிதாப சாவு
இதைத்தொடர்ந்து இடிபாடுகளுக்கிடையே உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜாகிர் உசேனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கித் தவித்துக்கொண்டிருந்த கார்த்தி மீட்புப்பணி நடந்து கொண்டிருந்தபோதே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கார்த்திக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். 
விபத்து குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். 
இதுகுறித்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்