தர்மபுரி மாவட்டத்தில் 705 மையங்களில் 65,581 பேருக்கு தடுப்பூசி கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மொத்தம் 705 இடங்களில் நடந்த முகாமில் 65,581 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-04-30 17:28 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மொத்தம் 705 இடங்களில் நடந்த முகாமில் 65,581 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது என்று கலெக்டர் தெரிவித்தார். 
தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 705 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இதேபோன்று 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் ஜூன் 2021-க்கு முன் 2-வது தடுப்பூசி செலுத்தி கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் “பூஸ்டர் தடுப்பூசி” செலுத்தி கொள்ள ஆர்வமாக வந்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தர்மபுரி நகராட்சி பள்ளி, சந்தைப்பேட்டை நகர்புற சுகாதார நிலையம், அன்னசாகரம், பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் நடந்த முகாம்களை ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார்கள் ராஜராஜன், அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதே போன்று மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் மொரப்பூர், கோபிநாதம்பட்டி, ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மொத்தம் 705 இடங்களில் நடந்த முகாமில் 65,581 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்