விதைத்தேவையை பூர்த்தி செய்ய வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நடவடிக்கை

உடுமலை பகுதி விவசாயிகளின் விதைத் தேவையை பூர்த்தி செய்ய வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-04-30 17:14 GMT
போடிப்பட்டி
உடுமலை பகுதி விவசாயிகளின் விதைத் தேவையை பூர்த்தி செய்ய வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தரமான விதைகள்
பயிர் சாகுபடியில் மகசூலைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விதைகள் உள்ளது. எனவே விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வேளாண்மை அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு தரமான விதைகளை மானிய விலையில் வழங்கி வருகின்றனர். 
இந்த நிலையில் நடப்பு பருவத்துக்கான விதைகளை உற்பத்தி செய்து இருப்பு வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாப்பான்குளம் அரசு விதைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் அறுவடை செய்யப்பட்டு தற்போது எந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பருவ மழை
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
‘உடுமலை வட்டாரத்தில் கல்லாபுரம், எலையமுத்தூர், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒரு போகத்தில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் கை கொடுத்து வருவதால் ஆண்டுக்கு 2 போகம் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு கோ51, ஐ.ஆர்.20, ஏ.டி.டி. 45, வி.வி.டி.1 மற்றும் தூயமல்லி நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
உடுமலை வட்டாரத்தில் 17½ ஏக்கரில் விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு ஏக்கருக்கு 50 கிலோ நெல் விதைகள் தேவைப்படும். அதேநேரத்தில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் எந்திர நடவு மேற்கொள்ளும்போது 3 முதல் 10 கிலோ வரையிலான விதைகள் போதுமானதாகும்.
புரட்டாசிப் பட்டம்
உடுமலை வட்டாரத்தில் அதிகபட்சமாக 17 டன் நெல் விதைகள் தேவைப்படும். அதற்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகள் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் வரும் ரபி பருவத்துக்கான நெல் விதைகள் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 
மேலும் புரட்டாசிப் பட்டத்தில் விதைப்பதற்காக கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய விதைகள்உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. அதற்கென விதைப்பண்ணைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது'.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்