பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெறும்-ஏடியூரப்பா நம்பிக்கை
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா:
பா.ஜனதா தேர்தல் வியூகம்
கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மத மோதல்கள் அதிகரித்து காணப்படுவதால், வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பா.ஜனதா தலைமை பல்வேறு வியூகங்களை வகுத்து கொடுத்து, அதன்படி நடந்து கொள்ளவேண்டும் கூறியுள்ளது.
மேலும் அமித்ஷா கர்நாடக வருகை பா.ஜனதாவிற்கு கூடுதல் வலுசேர்க்க இருப்பதாக அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா நிச்சயம் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
150 இடங்களில் வெற்றி வாய்ப்பு
சிவமொக்கா மாவட்டம் சென்றிருந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அங்குள்ள ெஹலிகாப்டர் தளத்தில் நிருபர்களை சந்தித்து பேசும்போது கூறியதாவது:-
ரம்ஜான் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். கர்நாடகத்துக்கு அமித்ஷா வந்ததும், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
முதல்-மந்திரியும், நானும் இந்த ஆலோசனையில் கலந்து கொள்வோம். இந்த முறை நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெறும். அதிலும் பத்ராவதி தொகுதியை பா.ஜனதா நிச்சயம் வெல்லும். இதற்கான பணிகளில் பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் தீவிரம் காட்டவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.