உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் நாய்கள் கண்காட்சி

உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.;

Update: 2022-04-30 16:42 GMT

விழுப்புரம், 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும், விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையும் இணைந்து உலக கால்நடை மருத்துவ தினத்தை நேற்று காலை விழுப்புரம் நகராட்சி பூங்காவில் கொண்டாடியது.

விழாவிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் திருமாவளவன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவையொட்டி போலீஸ் மோப்ப நாய்களின் அணிவகுப்பு நடந்தது. இதில்  20 இனங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்துகொண்டன.
இதில் உடல்ஆரோக்கியம், வயதுக்கு தகுந்த உடல் எடை, உரிமையாளர் பேச்சை கேட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாய்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. 

இதற்கு நடுவர் குழு தலைவராக புதுச்சேரி டாக்டர் குமரன் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டு தேர்வு செய்தனர். இதன் முடிவில் ஒவ்வொரு இனங்களிலும் தேர்வு செய்யப்பட்ட நாய்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை நாய்களின் உரிமையாளர்களுக்கு விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் வழங்கினார்.

அதனை தொடர்ந்து இலவச வெறிநோய் தடுப்பூசி போடும் பணியை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட 105 நாய்கள், 10 பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இம்முகாமில் சென்னை நபார்டு வங்கி இணை பொது மேலாளர் சுதர்சன், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, விழுப்புரம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் சாந்தி, ராஜேந்திரன், யுவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் பாக்யராஜ் தொகுத்து வழங்கினார். முடிவில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மோகன் நன்றி கூறினார். இந்த நாய்கள் கண்காட்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்