ஒட்டு மொத்த தூய்மை பணி

வேலூர் ஆரணி சாலையில் ஒட்டு மொத்த தூய்மை பணி தள்ளுவண்டி கடைகள் பறிமுதல்

Update: 2022-04-30 16:37 GMT
வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வேலூர்-ஆரணி சாலையில் சிறப்பு ஒட்டுமொத்த தூய்மை பணி இன்று நடந்தது. 

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் தூய்மை பணியை தொடங்கி வைத்து, சாலையோரம் உள்ள குப்பைகளை துடைப்பத்தால் பெருக்கி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணியில் வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் பணிபுரியும் 268 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். வேலூர்- ஆரணி சாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் இருந்து தாலுகா அலுவலகம் வரையிலான கழிவுநீர் கால்வாயை தூர்வாருதல் மற்றும் சாலை, சாலையோரம் கிடந்த குப்பைகள், கற்களை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். 

மேலும் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் நிறுத்தப்பட்டிருந்த 2 தள்ளுவண்டி கடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூர் தாலுகா அலுவலகம் அருகே கால்வாயின் மேலே குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. 

அதேபோன்று ரத்தினசிங்குளம் தெருவிலும் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், 3-வது மண்டல உதவிகமிஷனர் சுதா, மண்டலத்தலைவர் யூசுப்கான், சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்