சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே கோவில் திருவிழாவின்போது சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

Update: 2022-04-30 16:23 GMT
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே கோவில் திருவிழாவின்போது சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
சப்பரம் வீதி உலா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெருவடைத்தான் சப்பரம் வீதி உலா நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் நடந்தது. கோவில் வாசலில் இருந்து 86 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சப்பரத்தின் வீதி உலா தொடங்கியது.
முட்டுக்கட்டை போடும் பணியில்...
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக சப்பர வீதி உலா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சப்பர வீதி உலா வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 
இந்த சப்பரத்தின் சக்கரத்தில் முட்டுக்கட்டை போடும் பணியில் திருச்செங்காட்டங்குடி மேலவீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தீபன்ராஜ்(வயது 30) என்பவர் ஈடுபட்டார். சப்பரம் தெற்கு வீதியில் சென்றபோது சக்கரத்தில் தீபன்ராஜ் முட்டுக்கட்டை போட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்துள்ளார். 
சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது அவர் மீது சப்பரத்தின் ராட்சத சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமருகல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
பின்னர் அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 
உடனடியாக மின்சாரம் நிறுத்தம்
தஞ்சையில் நடந்த தேர்விழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்த சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சப்பர வீதி உலாவின் போது மின்வாரிய துறையினர் திருச்செங்காட்டங்குடி பகுதியில் மின்சாரத்தை நிறுத்தினர்.
மேலும் திருகண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குடும்பம்
இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தீபன்ராஜுக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், 3 வயதில் ருத்ரா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.  
திருமருகல் அருகே சப்பரத்தின் சக்கரம் ஏறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ரூ.5 லட்சம் நிவாரண உதவி
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் மெய்யநாதன், நாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலியான தீபன்ராஜ் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 லட்சத்திற்கான காசோலையை தீபன்ராஜின் உறவினரிடம் வழங்கினார்.
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோரும் தீபன்ராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

மேலும் செய்திகள்