நாகையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை
நாகையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்
வெளிப்பாளையம்:
நாகையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 36 ஆயிரத்து 850 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து நகராட்சி சார்பில் தயார் செய்யப்பட்ட இயற்கை உரத்தை பொதுமக்களுக்கு இலவசமாக அமைச்சர் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
இயற்கை உரம்
நாகை நகராட்சியில் தினமும் 15 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நாகை அரசு ஆஸ்பத்திரி பின்புறம் இயங்கும் இயற்கை நுண் உரம் தயார் செய்யும் இடத்தில் கொட்டப்படுகிறது.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் 60 நாட்கள் மக்கவைத்து இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இந்த இயற்கை உரம் ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நாகை நகராட்சியில் குப்பைகள் தேக்கம் என்பது இல்லாமல் போவதுடன், இயற்கை உரம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த சுற்றுலா தலம்
நாகை நகர பகுதி கிரீன் சிட்டியாக விரைவில் மாற்றப்படும். நாகை, வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல் என புகழ்பெற்ற தலங்கள் உள்ளது. இதை மையப்படுத்தி நாகையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் நாகைமாலி, முகமதுஷாநவாஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், கலெக்டர் அருண்தம்புராஜ், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார், மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துசெல்வன், பொறியாளர் ஜெயகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் அறிவழகன், அரசகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.