அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி பாதிப்பு

அதிகாரிகள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி பாதிக்கப்பட்டுள்ளது. முழு வீச்சில் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

Update: 2022-04-30 15:42 GMT
திருப்பூர்
அதிகாரிகள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி பாதிக்கப்பட்டுள்ளது. முழு வீச்சில் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
பாதை வரி அனுமதி
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் விவசாயிகள் மனுக்கள் அளித்து பேசியதாவது:-
விவசாயி மனோகரன்:-
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வங்கிக்கடன் பெறும்போது வருமான வரித்துறைக்கு கட்டும் டி.டி.எஸ். பிடித்தம் செய்கிறார்கள். விவசாயிகளிடம் இவ்வாறு வசூலிப்பது ஏற்புடையது அல்ல. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடன் அட்டை வழங்குவதை சீர்படுத்த வேண்டும். பி.ஏ.பி.பாசனம் ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் செய்யப்படுகிறது. அவ்வாறு பாசனம் செய்யும்போது ஒரு மடையில் இருந்து மறு மடைக்கு குழாய் மூலமாக தண்ணீரை கொண்டு செல்கிறார்கள்.
இவ்வாறு குழாய் அமைப்பதற்கு பாதை வரி அனுமதி பெற வேண்டும். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதை வரி அனுமதியை முறைகேடாக வழங்குவதால் குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்வது அதிகரித்துள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையம்
விவசாயி பழனிசாமி:-
அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான ஏற்பாடு நடக்கிறது. தேங்காய் கொப்பரை உலர்த்துவதற்கு களம் தேவைப்படுவதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விவசாயத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் மின்வாரிய அதிகாரி ஒருவர் ரூ.25 ஆயிரம் பெற்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஈஸ்வரமூர்த்தி (உழவர் உழைப்பாளர் கட்சி):-
மண் வாய்க்காலான பழைய அமராவதி வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்தால் கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும். இந்த ஆண்டு அலங்கியம் வாய்க்காலை தூர்வார ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு, செப்டம்பர் மாத பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன் வாய்க்கால் வெட்ட வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் கடந்த 2000-ம் ஆண்டு காடா திட்டம் செயல்படுத்தும்போது, சங்கம் பதிவு செய்து மேலாண்மை தொகை வழங்கப்பட்டது. அதில் விவசாயிகள் தரப்பில் 1 பங்கும், அரசு 9 பங்கும் போட்டு அலங்கியம் வாய்க்கால் பாசன சபைக்கு ரூ.2 லட்சத்து 13 ஆயிரம் உள்ளது. அதில் இருந்து வட்டி எடுத்து செலவு செய்யப்பட்டது. தற்போது அந்த தொகை பாசன சங்கத்துக்கு வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை மே மாதம் 30-ந் தேதி வரை தொடர்ந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை
உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 10-ந் தேதி முதல் கரும்பு அரவையை தொடங்கியுள்ளது. 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலங்கியம் பகுதியில் 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பதிவு செய்யப்பட்டு வெட்டுக்கு ஆட்கள் கிடைக்காமல் இருப்பதால் கரும்பை அரவை செய்வதில் சிரமம் உள்ளது. அதற்கு தகுந்த ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
பாலதண்டபாணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):-
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அமராவதி, பி.ஏ.பி. பாசன விவசாயிகளிடம் இருந்து 3 ஆயிரத்து 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10-ந் தேதி முதல் ஆலையில் அரவை தொடங்கப்பட்டு இதுவரை 400 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களாக அரவை பணி பாதிப்படைந்துள்ளது. ஆலையில் உள்ள 3 அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று மாறுதலாகி விட்டனர். மொத்தம் 28 பேரில் பணியாளர்கள் 4 பேர் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 6 பேருடன் ஆலை இயக்கப்படுகிறது. முழு அரவையை செய்தால் மட்டுமே கரும்பு முழுவதும் கொள்முதல் செய்யப்படும். புதிதாக அதிகாரிகள், அரவை ஆட்களை நியமித்தும் முழுமையாக அரவை பணி நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
நாய் கடித்து செத்த ஆடுகளுக்கு இழப்பீடு
குமார் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):-
காங்கயம் ஆலாம்பாடியை சேர்ந்த பெண் விவசாயி, அரணி வாய்க்கால் மூலம் பி.ஏ.பி. பாசனத்தை பெற்று வருகிறார். அருகில் உள்ள விவசாயி தண்ணீர் கொடுக்க இடையூறு செய்வதால் அவர் பெரிதும் சிரமப்படுகிறார். முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊத்துக்குளி சென்னிமலைபாளையம் பகுதியில் தாழ்வழுத்த மின்சாரத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். விருதுநகர்-கோவை மின்திட்டத்தில் உயர்கோபுரம் அமைக்கும் பணிகள் நமது மாவட்டம் வழியாக நடக்கிறது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி அதன்பிறகு கோபுரம் அமைக்க வேண்டும்.
ஊத்துக்குளி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் கடித்து 9 ஆடுகள் செத்தன. ஆடுகளை வளர்த்த விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க ஆவண செய்ய வேண்டும். நஞ்சராயன் குளம் முன் உள்ள இடம் தனியார் அமைப்புக்கு குத்தகைக்கு வருவாய்த்துறை கொடுத்துள்ளதாக தெரிகிறது. அவ்வாறு கொடுக்காமல், பறவைகள் சரணாலயம் அமைய உள்ளதால் அந்த இடத்தில் பூங்கா உள்ளிட்டவற்றை வருவாய்த்துறை செய்ய வேண்டும்.
வண்டல் மண்
மதுசூதனன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) :-
தமிழக அரசு 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கியுள்ளது. நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஒரே விவசாயி பல இணைப்புகளை பெற்றுள்ளனர். ஆனால் ஒரு இணைப்பு கூட கிடைக்காத விவசாயியும் உள்ளனர். அத்தகைய விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
உடுமலை பெரியகுளம், வாளவாடி குளத்தின் கரையோரத்தை சீரமைக்க வேண்டும். குளங்களில் வண்டல் மண் அள்ளுவதற்கு கலெக்டர் அனுமதிக்க வேண்டும். பெரியவாளவாடி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக 31 ஏக்கர் நிலத்தை பொது ஏலம் விட்டு விவசாயம் செய்ய அனுமதித்தால் கோவிலுக்கு வருவாய் கிடைக்கும். அதுபோல் உடுமலையில் உள்ள கோவில் நிலங்களையும் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
சிறிய அரங்கில் கூட்டம்
கொப்பரை தேங்காயை  உடுமலை பகுதி விவசாயிகளிடம் வாங்காமல், வியாபாரிகள் இருக்கும் இடத்துக்கு சென்று அதிகாரிகள் வாங்குகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு 100 ஏக்கர் நிலம் வழங்கி அலுவலகம் உள்ளது. ஆனால் அந்த அலுவலக கல்வெட்டில் ஆங்கிலமும், இந்தியும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் இருக்கும் கல்வெட்டில் தமிழ் இடம்பெற செய்ய வேண்டும்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேஜை, இருக்கை கொண்ட பெரிய கூட்ட அரங்கில் நடந்து வந்தது. விவசாயிகள் ஒரு பக்கமும், அதிகாரிகள் ஒரு பக்கமும் இருப்பார்கள். ஆனால் சிறிய கூட்ட அரங்கில் கடந்த சில கூட்டம் நடத்தப்படுகிறது. இடநெருக்கடி இருப்பதோடு விவசாயிகளுக்கு உரிய வசதியும் இல்லாமல் உள்ளது. அதுபோல் விவசாயிகள் குறைகளை தெரிவிக்கும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பதில் அளித்து பேசுவது வழக்கம். ஆனால் தற்போது விவசாயிகள் முழுவதும் பேசி முடித்த பிறகு பதில் அளிப்பதாக சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. முந்தைய முறைப்படி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.
மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்