பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டையில் சிறப்பு முகாமில் 2,095 பேருக்கு தடுப்பூசி
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டையில் சிறப்பு முகாமில் 2,095 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. தாலுகா பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் என மொத்தம் 89 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
முகாம் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. கிணத்துக்கடவு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற தடுப்பூசி போடும் முகாமை நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நேற்றைய முகாமில் முதல் டோஸ் தடுப்பூசி 39 பேருக்கும், 2-வது டோஸ் தடுப்பூசி 370 பேருக்கும் என மொத்தம் 409 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. முகாமில் டாக்டர்கள் சமீதா, கவிதா, திலீப்குமார், பிரபு, பிரித்திகாசுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 60 இடங்களில் நடந்த முகாமில் 261 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சியில் 281 பேருக்கும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 706 பேருக்கும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 438 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
கிணத்துக்கடவு தாலுகா, பொள்ளாச்சி நகராட்சி மற்றும் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், சுல்தான்பேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 95 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.